Thursday, 28 February 2019

ஸ்ரீ சாய் பாபாவின் வாழ்க்கைக் காலத்தில் எழுதப்பட்ட அரிய கடிதம் - மொழிபெயர்க்கப்பட்ட பொக்கிஷம்


ஹார்தாவைச் சேர்ந்த திரு. கிருஷ்ணராவ் நாராயண் பருல்கர் அவர்களால் திரு. ஹரிசீதாராம் தீக்ஷித்திற்கு எழுதப்பட்ட நாளிடப்பட்ட கடிதம்

மூலம்: சாய்லீலா இதழ், 1923-ஆம் ஆண்டு

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: கே.டபிள்யூ.தேஷ்பாண்டே


நாள் 17.02.1915

ஸ்ரீ காகாசாகேப் தீக்ஷித்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள் உரித்தாகட்டும்! 

தாங்கள், ஸ்ரீ சாதுபய்யாவிற்கு எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றது. ஸ்ரீ பாலக்ராம்ஜி மற்றும் ஸ்ரீ முக்தாராம்ஜி ஆகிய இருவரும் மகராஜின் திருவுருவப் புகைப்படத்துடன் இங்கு வந்தார்கள்.  மகராஜின் வழிகாட்டுதலின்படி நாங்கள் ‘லகு ருத்ரம்’ ஸ்மரித்து (பாபாவின் திருவுருவப் படத்திற்கு) பூஜை செய்து அந்த புகைப்படத்தை ஸ்ரீ சாதுபய்யாவின் இல்லத்தில் மாட்டிவிட்டு, பிரசாத விநியோகம் செய்து விழாவை நிறைவு செய்தோம்.  அன்றைய இரவே, என்னுடைய மனைவிக்கும், மைத்துனர் ஸ்ரீ தாதாஜி கவ்வாலே அவர்களுக்கும் பின்வரும் அற்புத அனுபவங்கள் ஏற்பட்டன: 

முதல் அனுபவம்

ஸ்ரீ நாராயண் தாதாவிற்கு சீரடியில் சமர்த்தருக்கு அருகாமையில் நிற்பதுபோல் தோன்றியுள்ளது.  அப்போது சமர்த்தர் அவரை ஹார்தாவிற்கு தன்னோடு வரும்படி கூறியுள்ளார்.  இருவரும் கோதாவரி நதிதீரத்தை அடைந்து அங்கிருந்து சீரடியை நோக்கிய வண்ணம் நின்றுள்ளார்கள்.  கோதாவரியின் நீர் மட்டம் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகப் பெருக்கெடுத்திருந்தது.  அவர்கள் அங்கு இரண்டு கோதுமை மூட்டைகள்  பிரித்த / திறந்த நிலையில் இருக்கக் கண்டனர்.  அப்போது சமர்த்தர், இந்த நதியை எவ்வாறு கடப்பது என்று நாராயண்ராவைக் கேட்டுள்ளார்.  அந்த தருணத்திலேயே, அவர்கள் பக்கத்தில் பத்து எருதுகளையும், நதிக்கு நடுவில் மிக செம்மையாக அமைக்கப்பட்ட ஒரு சாலையையும் கண்டனர்.  பிறகு (அந்த சாலை,) ஹார்தாவில் எனது வீட்டிலிருந்து ஸ்ரீ சாதுபய்யாவின் வீடுவரை செல்லக் கண்டனர்.  அவர்கள் இருவரும் ஒன்றாக எருதுகளோடு சென்றுள்ளனர்.  பிறகு ஸ்ரீ சமர்த்தர் மறைந்துவிட்டார்.

இரண்டாவது அனுபவம்

எனது மனைவியிடம், ஸ்ரீ மாதவ்ராவ் ஒரு தட்டில் தேங்காயையும், குங்குமத்தையும் எடுத்துக் கொண்டு வந்து பாபா அவற்றை அவளுக்காகக் கொடுத்தனுப்பியதாக சொல்லியுள்ளார். 

இந்த இரண்டு அனுபவங்களையும் நான் உங்களிடம் சொல்லிவிட்டேன்.  ஸ்ரீ பாலக்ராம்ஜியும், ஸ்ரீ முக்தாராம்ஜியும் இங்குதான் தங்கியுள்ளனர்.  நாங்கள் தினந்தோறும் பூஜையும், ஆரத்தியும் செய்து ஆனந்தமாக இருக்கின்றோம்.  தாங்களும் இங்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.  ஆனால், தாங்கள் இங்கு வராததற்கான காரணத்தைத் தங்கள் கடிதம் மூலம் அறிந்தோம்.  சமர்த்தர், தங்களை ஹார்தாவிற்கு வந்து எங்களைப் பார்க்கும்படி சொல்வார் என்று எதிர்பார்க்கிறோம்.  சாதுபய்யா, பாபாவிடமிருந்து ஆணைகள் கிடைக்கப் பெற்றவுடன் சீரடிக்குப் புறப்பட்டுச் சென்றார்.  அவர் சென்று இன்றோடு பத்து நாட்கள் கடந்துவிட்டன.  பாபாவின் ஆசீர்வாதங்களோடு நாங்கள் அனைவரும் இங்கு மகிழ்ச்சியாக இருக்கின்றோம்.  நாம் தொடர்ந்து தொடர்பிலேயே இருப்போம்.  திருமதி. பாபிசாஹேபிடம் எனது வந்தனங்களைத் தெரிவிப்பீராக!

தங்கள் அன்புள்ள,
கிருஷ்ணராவ் நாராயண் பருல்கர்

{சாய் ஆரா இதழ் வால்யூம்-01/இதழ்-04 - ஜனவரி-2019 ஆம் நாளிடப்பட்ட இதழிலிருந்து எடுத்து மொழிபெயர்க்கப்பட்டது}

No comments:

Post a Comment